கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) -- 2012ஆம் ஆண்டுத் தொடங்கி பயன்படுத்தப்படும் அடையாள அட்டைக்குப் பதிலாக பல புதிய அம்சங்களுடனான அடையாள அட்டையைத் தேசிய பதிவுத் துறை இறுதி செய்து வருகிறது.
புதிய அடையாள அட்டை, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப உயர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ ஷம்சுல் அன்வார் நசாரா கூறியுள்ளார்.
''இந்நடவடிக்கை அடையாள அட்டை மோசடி மற்றும் தரவு கசிவு போன்ற பிரச்சனைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய அடையாள அட்டையின் வடிவமைப்பு லேசர் வேலைப்பாடு மற்றும் மேம்பட்ட எலோகிராம் கூறுகளுடன் மிகவும் நவீனமாக உள்ளது, '' என்றார் அவர்.
அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய தலைமுறை அடையாள அட்டையின் அண்மைய நிலவரம் குறித்து தெங்காரா நாடாளுமன்ற உறுப்பினர் மந்த்ஸ்ரி நாசிப் எழுப்பிய கேள்விக்கு டத்தோஶ்ரீ ஷம்சுல் அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.
புதிய தலைமுறை அடையாள அட்டை நீடித்திருக்குமா என்பது சான்றளிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதோடு, அதிக பாதுகாப்புடைய சில்லும் அதில் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)