கோத்தா பாரு, ஜனவரி 11 (பெர்னாமா) -- இம்மாதம் மூன்றாம் தேதி கிளாந்தான், கோலா கிராய் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தொடர் சோதனை நடவடிக்கையின் மூலம் மூன்று உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 52 கிலோகிராம் எடைக் கொண்ட கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த நான்கு மாதங்களில் நடத்தப்பட்ட Ops Agas சோதனை நடவடிக்கையின் மூலம் கிளாந்தானில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கையைப் போலீசார் முறியடித்ததாகப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.
ஜாலான் கோத்தா பாரு–குவா முசாங்கில் நடத்தப்பட்ட முதல் சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஓட்டிச் சென்ற புரோட்டான் எக்ஸோரா ரக கார் போலீஸ் வாகனத்துடன் மோதியதைத் தொடர்ந்து 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஹுசைன் உமர் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் 52 கிலோகிராம் எடைக் கொண்ட 320 கஞ்சா பூக்களின் நெகிழிப் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கோலா கிராய், தாமான் ஶ்ரீ குச்சிலில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை நடவடிக்கையின் போது பெரோடுவா மைவி காரைச் செலுத்தி வந்த 40 மற்றும் 50 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஹுசைன் உமர் கூறினார்.
சம்பந்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கையிலும் சுமார் 18 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் ஒரு லட்சம் ரிங்கிட் மதிப்புடைய இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 19 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் ஆகும் என்று டத்தோ ஹுசைன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி ஜனவரி 16ஆம் தேதி வரை 14 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39Bஇன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)