பொது

நான்கு நாடுகளுக்கான பயணம் மூலம் மலேசியாவை மீண்டும் மிளிர செய்வதற்கான வாய்ப்பு - பிரதமர் நம்பிக்கை

20/11/2024 06:32 PM

கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) -- நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி எகிப்து, சவுதி அரேபியா, பெரு, பிரேசில் ஆகிய நாடுகளுக்கான தனது பயணம் உலகளவில் மலேசியாவை மீண்டும் மிளிர செய்யும் வாய்ப்பாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வகைப்படுத்தியுள்ளார்.

இன்று நாட்டிற்கு பாதுகாப்பாக திரும்பிய அன்வார், 11 நாட்கள் நீடித்த இப்பயணம் மலேசியா மீண்டும் ஒரு புதிய பாதையில் நம்பிக்கையோடு முன்னேறுவதற்கான வழி என்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பயணம் அதிகாரப்பூர்வ அழைப்புகளை நிறைவேற்றியதோடு 19 நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களுடனான சந்திப்புகள் அனைத்துலக உறவுகளை வலுப்படுத்தியதாகவும் டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.

உலகின் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையில் உள்ள நிலையில் இப்பயணம் மக்கள் மற்றும் நாட்டின் வளமான வாய்ப்புகளுக்கு வழிவகுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு அதிகாரப்பூர்வச் சந்திப்புகள் மற்றும் உரையாடல்களில், முதலீடு, வர்த்தகம் மற்றும் கூட்டு முயற்சிகளின்வழி, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது என்று அன்வார் விவரித்தார்.

கையொப்பமிடப்பட்ட அடைவுகள் அல்லது ஒப்பந்தங்கள் மட்டுமல்லாது, மனிதநேயம், நீதி, மேன்மை ஆகியவற்றின் மதிப்புகளை எப்போதும் உறுதியாக நிலைநிறுத்தும் மலேசியாவின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் அனைத்துலகச் சமூகத்தின் ஒற்றுமையும் அணுகுமுறையும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)