சுங்கை பூலோ, மார்ச் 10 - ‘லிண்டோங் கெர்ஜாயா MyFutureJobs Wira’ திட்டத்தின் கீழ் 2030-ஆம் ஆண்டிற்குள் சுமார் 5,000 முன்னாள் ராணுவத்தினர் வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் நடப்பாண்டில் விரிவுபடுத்தப்பட்ட 2,500-க்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்களைச் சென்றடைவதோடு குறைந்தபட்சம் 45 விழுக்காட்டு வேலை வாய்ப்பு விகிதத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
"எங்கள் நோக்கம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல, முன்னாள் வீரர்களின் திறன் மற்றும் ஒழுக்கத்திற்கு ஏற்ற கண்ணியமான ஊதியத்துடன் கூடிய வேலைகளை அவர்கள் பெறுவதை உறுதி செய்வதாகும்.
"முன்னாள் ராணுவத்தினரை வேலைக்கு அமர்த்துவது தொழில்துறைகளுக்குத் திறமையான பணியாளர்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாகவும் அமையும்," என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் ராணுவத்தினர் விவகாரக் கழகம் (Perhebat), மலேசிய ஆயுதப்படை முன்னாள் வீரர் விவகாரத் துறை (JHEV) மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Perkeso) ஆகியவற்றிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) பரிமாறிக்கொள்ளும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
இந்நிகழ்வை பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலித் நோர்டினும் முன்னின்று நடத்தினார்.
இந்த ஒப்பந்தமானது முன்னாள் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான ஒரு தெளிவான கட்டமைப்பை வழங்குகிறது என்று ரமணன் குறிப்பிட்டார். JHEV மற்றும் Perhebat மூலம் அடையாளச் சரிபார்ப்பு, MyFutureJobs மற்றும் 'Veteran Integrated Benefit System' (Vibes) தளங்களுக்கு இடையிலான தரவு ஒருங்கிணைப்பு ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், 2020 முதல் 2025-ஆம் ஆண்டு வரை மொத்தம் 5,530 முன்னாள் ராணுவத்தினர் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"கடந்த ஆண்டில் மட்டும் 573 முன்னாள் வீரர்கள் உற்பத்தி, சேவை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். இதுவரை 14,000-க்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் MyFutureJobs இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலித் நோர்டின் கூறுகையில், இந்த முத்தரப்பு கூட்டணி முன்னாள் வீரர்களின் இருப்பிடம் மற்றும் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு விரிவான வேலைவாய்ப்பு சூழலை உருவாக்கும் என்றார்.
"ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 ராணுவ வீரர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர், அவர்களில் பெரும்பாலோர் 39 முதல் 41 வயதுடையவர்கள். அவர்கள் இன்னும் நாட்டுக்கு பங்களிக்க முடியும். அவர்களுக்கு முறையான தளம் வழங்கப்படாவிட்டால் அது நாட்டுக்கு ஒரு இழப்பாகும்," என்று அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புத் தொழில் கொள்கை மற்றும் 'Perhebat Transformation Plan 2026-2035' ஆகியவற்றுடன் இந்த முன்முயற்சி ஒத்துப்போவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)