புத்ராஜெயா, 20 நவம்பர் (பெர்னாமா) -- விரைவில் பல மாநிலங்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கும்படி தொடர்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஃபஹ்மி ஃபட்சில் கேட்டுக் கொண்டார்.
வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டாலும், தொலைத்தொடர்பு இணைப்பு நிலையாகவும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர் தெரிவித்தார்.
"எனவே, வழக்கத்தை விட கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் மாநிலங்களிலும் வட்டாரங்களிலும், தகவல் துறையான பெர்னாமா, ஆர்டிஎம், எம்சிஎம்சி, ஜேகோம் ஆகியவை தயார்நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு இடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும், அந்த இடத்தில் உள்ள இணைப்பு மற்றும் தொடர்பில் எந்த பாதிப்பும் ஏற்படாமல், எப்போதும் நாங்கள் தயார்நிலையில் இருப்போம்'', என்று அவர் கூறினார்.
இதனிடையே, நாட்டில் இணைய பகடிவதைச் சம்பவங்கள் கடந்தாண்டில் பதிவான நாளொன்றுக்கு 10-ஐ காட்டிலும் 2024ஆம் ஆண்டு நவம்பர் வரை நாளொன்றுக்குச் சராசரி 27ஆக அதிகரித்துள்ளதை ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.
எனவே, இணைய குற்றங்களின் அபாயத்தைத் தவிர்க்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், குறிப்பாக 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)