டுங்குன், 21 நவம்பர் (பெர்னாமா) -- இன்று காலை கிளந்தான், கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை இரண்டிலிருந்து கோலா டுங்குன் டோல் சாவடியை நோக்கில் செல்லும் 341.2-ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் ஒருவர் பலியான வேளையில், அவரது இரண்டு குழந்தைகள் காயங்களுக்கு ஆளாகினர்.
காலை சுமார் 10.15 மணியளவில் ஏற்பட்ட இச்சாலை விபத்தில் கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள கோத்தா ஜாலான் சுல்தான் யாஹ்யா பெட்ராவைச் சேர்ந்த 44 வயதுடைய வான் அஸ்லிசா வான் அப்துல்லா சனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதோடு, 20 வயதுடைய வான் நூர் நிஷா கிஸ்தினா வான் சுல்ஃபான் மற்றும் ஒரு வயது ஆறு மாத குழந்தை முஹமட் அய்யாஷ் மைக்கல் நோர்டின் சிறு காயங்களுக்கு ஆளாகினர்.
குவாந்தானிலிருந்து குவாலா திரெங்கானுவை நோக்கி வான் அஸ்லிசா ஓட்டிச் சென்ற புரோட்டோன் பெர்சோனா ரக கார், நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் உள்ள காங்கிரீட் கால்வாயில் மோதுவதற்கு முன் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
எனவே, விபத்தின் போது கால்வாயில் வீசப்பட்டு அப்பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த அப்பெண்ணின் உடல் கிளந்தான், டுங்குன் மருத்துவமனை தடையவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்ட வேளையில், காயமடைந்த இரண்டு பிள்ளைகளையும் மேலதிக சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41 உட்பிரிவு 1-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)