பொது

எழுத்தாளர் கோ.முனியாண்டி காலமானார்

22/11/2024 08:12 PM

கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான எழுத்தாளர் கோ.முனியாண்டி காலமானார்.

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று காலையில் இயற்கை எய்தினார்.

அவருக்கு வயது 76.

பேராக் மஞ்சோங் மாவட்டத்தின் புன்டூட்டில் உள்ள சப்போக் தோட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கோ.முனியாண்டி பல ஆண்டுகளாக நாவல், புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை என்று பல படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

மலேசியாவின் ஆரம்பப் புதுகவிஞர்களில் ஒருவரான அவர், 1977ஆம் ஆண்டு வெளியான வானம்படி வார இதழ், உருவாக்கிய கவிஞர்களில் முக்கியமானவர்.

தமது தலைமையில் சித்தியவானில் 67 நூல்களை வெளியிட்டுள்ள இவர் நவீன தமிழ் இலக்கியவாதியாவார்.

160 இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் கோ.முனியாண்டி 15 ஆண்டுகள் சமுதாய பணியில் ஈடுபட்டிருந்தார்.

நண்பன் மற்றும் மக்கள் ஓசை நாளிதழில் நிருபராக பணியாற்றிய அனுபவம் கொண்டிருந்த அவருக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ஆதி விருதும் வழங்கப்படுள்ளது.

அன்னாரின் இறுதி சடங்கு திங்கட்கிழமை நவம்பர் 25ஆம் தேதி காலை மணி 9-க்கு எண் 37, கம்போங் அம்பிகா, ஆயர் தாவார் எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)