கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- தம்மை மிதித்ததால் புதிய மாணவருக்கு காயம் விளைவித்த குற்றத்திற்காக, மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம், UPNM-மின் இராணுவ பயிற்சி கழகம், ALK பயிற்சி அதிகாரி ஒருவர், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் நோர்லியானா ஹனிம் அப்துல் ஹலிம் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றத்தை 22 வயதுடைய முஹ்மட் அடில் மாட் அவாங் கானி மறுத்து விசாரணைக் கோரினார்.
கடந்த மாதம் 21-ஆம் தேதி, இரவு மணி 10.45 அளவில், UPNM-மின் இராணுவ பயிற்சி கழகத்தின் அணிவகுப்பு மைதானத்தில், காலணியால் தம்மை மிதித்ததால்...
19 வயதுடைய முஹ்மட் ஹசிக் இக்பால் ரஷிடிக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக, முஹ்மட் அடில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 323-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
ஐயாயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை, தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவரை விடுவிக்க அனுமதியளித்த மாஜிஸ்திரேட் நோர்லியானா ஹனிம், புகாரளித்தவர், பாதிக்கப்பட்டவர் மற்றும் அரசு தரப்பு சாட்சிகளை அணுக வேண்டாம் என்ற கூடுதல் நிபந்தனையையும் விதித்தார்.
இதனிடையே, ஆவணங்களைச் சமர்ப்பிக்க வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்தாண்டு பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)