ஜார்ஜ்டவுன், 22 நவம்பர் (பெர்னாமா) -- கல்விக்கு வயது தடையில்லை என்பது மீண்டும் மெய்பிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம், USM-இல், நேற்று நடைபெற்ற 62-வது பட்டமளிப்பு விழாவில், ஹாங் கோங்கின் 80 வயது முதியவர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றார்.
கற்றல் மீதான ஆர்வமும் அறிவைப் பகிர்ந்துகொள்ளும் தமது விருப்பமும், சமூக நிலைத்தன்மையில் புதுமை எனும் தலைப்பில் ஆய்வறிக்கையைச் செய்ய தூண்டியதாக, ஹாங் கோங் நாட்டின் பொறியியலாளர் கழகத்தின் முன்னாள் தலைவருமான முனைவர் ஜான் லுக் வாங் க்வோங் கூறினார்.
பொறியியாலாளர், சொத்துடமை முகவர் மற்றும் வழக்கு நிபுணராக, வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த தாம், ஹாங் கோங்கில் நிலவிய வீடமைப்புப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்காக 2017-ஆம் ஆண்டு தமது முனைவர் படிப்பைத் தொடங்கியதாக முனைவர் ஜான் தெரிவித்தார்.
ஹாங் காங் உடன் இணைந்து, மலேசியாவில் தமது பகுதிநேர கல்வியை ஐந்தரை ஆண்டுகளில் நிறைவுச் செய்தாக முனைவர் ஜான் லுக் வாங் க்வோங் கூறினார்.
"முழு நேர பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். ஆனால், அதிகமான பிற கடமைகள் உள்ளன. உதாரணத்திற்கு, சில பொது நிறுவனங்களில் பகுதிநேர நிர்வாகியாக பணிபுரிந்தேன். ஆனால் அவை முழு நேர வேலை இல்லை. அதனால் அதிக நேரம் இருந்தது. அதிக முயற்சியுடன் படிப்பை மேற்கொண்டேன்," என்றார் அவர்.
சமுதாயத்திற்கு பங்களிக்க விரும்பியதால் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ள தாம் முடிவு செய்ததாக முனைவர் ஜான் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)