சம்பல், 26 நவம்பர் (பெர்னாமா) -- வட இந்திய நகரமான சம்பலில் ஏற்பட்ட மோதலில் நால்வர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள் மூடப்பட்டதோடு, இணைய சேவையும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மசூதி, இந்துக் கோவில் அமைந்திருந்த தளத்தின் மீது கட்டப்பட்டதா என்பதை கண்டறியும் அதிகாரப்பூர்வ ஆய்வைத் தொடர்ந்து இம்மோதல்கள் ஏற்பட்டன.
இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சம்பல் நகரில் உள்ள ஷாஹி ஜாமா பள்ளிவாசலுக்கு வெளியில் சுமார் 1,000 முஸ்லிம்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட மசூதி, இந்து கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாக இந்து வழக்கறிஞர் ஒருவர் செய்திருந்த விண்ணப்பத்திற்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி குழு ஒன்று ஆய்வு செய்வதைத் தடுப்பதற்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனால், பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டதோடு பொது மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
மேலும், நவம்பர் இறுதி வரை அதிகாரப்பூர்வ அனுமதியின்றி வெளிதரப்பினர், சமூக அமைப்புகள் மற்றும் பொது பிரதிநிதிகள் சம்பல் நகருக்குள் நுழைவதற்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் போலிசார் மீது கற்களை வீசி எரிந்ததால், அவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பெரும்பாலும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய இந்து ஆர்வலர் குழுக்கள், முஸ்லீம் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் போது இந்தியாவில் பல மசூதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாகக் கூறி வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)