அலோர் ஸ்டார், 26 நவம்பர் (பெர்னாமா) -- இரண்டு லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணத்தைத் திருடிய குற்றத்தை ஒப்புக் கொண்ட பாதுகாவலர் ஒருவருக்கு, அலோர் ஸ்டார் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் 4,500 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
விதிக்கப்பட்ட அபராதத்தை, குற்றம் சாட்டப்பட்ட முகமட் ஃபைருல் ஃபிஸ்ரீ அப்துல் ஹமிட் செலுத்தத் தவறினால் அவருக்கு மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்டிரேட் சிட்டி நோர்ஹிடாயா முகமட் நூர் உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, கெடா அலோர் ஸ்டாரில் உள்ள காவல் வைரமாஸ் குழும நிறுவனத்தில் தம்முடன் வேலை செய்யும் இரு நண்பர்களுடன் முகமட் ஃபைருல் ஃபிஸ்ரீ இரண்டு லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஜூல் ஹில்மி அஹ்மட் மற்றும் முஹமட் ஃபட்ஸ்லி யாகூப் ஆகியோர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.
ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 34-உடன் குற்றவியல் சட்டம் செக்ஷன் 381கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)