பொது

85 விழுக்காட்டு பொது சேவை துறை ஊழியர்கள் SSPA-விற்கு இணக்கம்

26/11/2024 06:06 PM

புத்ராஜெயா, 26 நவம்பர் (பெர்னாமா) --   இதுவரை, நாடு முழுவதிலும் உள்ள 85 விழுக்காட்டு பொது சேவை துறை ஊழியர்கள் பொது சேவை ஊதிய முறை, எஸ்.எஸ்.பி.எ-விற்கு இணக்கம் தெரிவித்து, கையெழுத்திட்டுள்ளனர்.

எஞ்சிய 15 விழுக்காட்டினர் ஸ்.எஸ்.பி.எ தொடர்பில் முடிவெடுக்க அவர்கள் தெளிவான தகவல்களைப் பெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, பொது சேவை துறை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்க தலைமை செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.

இப்புதியத் திட்டம் குறித்த சில தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதும் இத்திட்டத்திற்கு மாறுவதில் பொது சேவை துறை ஊழியர்கள் இன்னும் குழப்பத்தில் இருப்பதற்கு காரணம் என்று டான் ஶ்ரீ ஷம்சுல் விளக்கினார்.

''விளக்கமளிக்க ஜே.பி.ஏ முழு முயற்சிகளை மேற்கொள்ளும். சமூக வலைத்தளத்தில் உள்ள தவறான தகவல்களால் இன்னும் சிலர் குழப்பத்தில் இருக்கலாம். ஜே.பி.ஏ-இன் அறிவுரையைக் கேளுங்கள். ஜே.பி.ஏ உடனான சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள். சமூக வலைத்தளத்தில் உள்ள நண்பர்கள் கூறுவதைக் கேட்காதீர்கள். இதற்குக் காரணம் சில நேரங்களில் சமூக வலைத்தள நண்பர்கள் அரசாங்கத் தொழிலில் இல்லாவிட்டால் அவர்களுக்கு எப்படி புரியும்? எப்படி அறிவுரை கூறுவார்கள்? எனவே, ஜே.பி.ஏ-இன் அறிவுரையைக் கேளுங்கள், ஜே.பி.ஏ-ஐ பின்பற்றுங்கள்'', என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற Kenegaraan Malaysia Madani: Taat Setia என்ற கருத்தரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஷம்சுல் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)