கோலா பெராங், 30 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று முதல் நாடு முழுவதிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு மத்திய அரசாங்கம் 1,000 ரிங்கிட் உதவி நிதியை வழங்கியுள்ளது.
தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் இந்நிதி வழங்கப்படுவதோடு தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா நிர்ணயித்த விதிமுறைகளின் படி கட்டம் கட்டமாக விநியோகிப்படுவதாக துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
''உதவிகள் குறிப்பாக பண உதவி வழங்குவது முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன். பிபிஎஸ்க்கு இடமாற்றம் செய்த குடும்பத் தலைவர்கள், நட்மா நிர்ணயித்த விதிமுறைப்படி உதவி கிடைக்காமல் இருக்கக்கூடாது,
இன்று, திரெங்கானு, மாத்தாங் தேசிய இடைநிலைப்பள்ளியில் செயல்படும் PPS-சிற்கு வருகை மேற்கொண்டப் பின்னர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
வீடும் வீட்டுப் பொருட்களும் சேதமடைந்தது போன்ற இழப்புகளை எதிர்நோக்கிய குடும்பத் தலைவருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கோ அவசர உதவி மற்றும் நிதியை வழங்க, வெள்ளம் ஏற்பட்டிருக்கும் மாநிலத்தின் அரசாங்கங்களை மத்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)