பொது

கிளந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைக்க இரண்டு கோடியே 25 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு தேவை

02/12/2024 05:01 PM

கோத்தா பாரு , 02 டிசம்பர் (பெர்னாமா) -- கிளந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாநில மற்றும் கூட்டரசு சாலைகளைச் சீரமைக்க இரண்டு கோடியே 25 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு தேவைப்படும் என்று அம்மாநில பொதுப்பணித் துறை, ஜே.கே.ஆர் கணித்துள்ளது.

பேரிடரால் சேதம் ஏற்பட்டிருப்பதால், நிதி அமைச்சு அல்லது தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா மூலமாகவோ தமது தரப்பு ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பிக்கும் என்று பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.

''இந்தத் தகவல்கள் அனைத்தையும் ஓரிரு நாட்களில் தெரிவிப்போம். அந்த அறிக்கை நிதி அமைச்சு மற்றும் நட்மாவுக்கு அனுப்பப்படுவதை நானே உறுதி செய்வேன். அவர்கள் அதை
(ஒதுக்கீடு) வழங்கும் போது, நாம் விரைவில் கேட்போம். ஆனால் வெள்ளம் மீண்டும் ஏற்படலாம்,'' என்று அவர் கூறினார்.

கிளந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளைப் பார்வையிடுவதற்கு முன்னர், கோத்தா பாரு ஜே.கே.ஆர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அஹ்மாட் மஸ்லான் அவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளம் மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால், சீரமைப்பு பணிகளைத் தொடங்குவதற்கு சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சீரமைப்பு பணிகள் முழுமையடைவதற்கு மூன்று மாதங்கள் தேவைப்படும் என்றும் அஹ்மாட் மஸ்லான் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)