பொது

வெள்ள காலங்களில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் - பாலா

03/12/2024 08:03 PM

கோலாலம்பூர், 03 (பெர்னாமா) -- ஆண்டின் இறுதியை நெருங்கும் போதெல்லாம், பருவ கால மாற்றம், மழை, வெள்ளத்தைக் கொண்டு வந்து இயற்கை பேரிடரில், ஆயிரக்கணக்கான மக்களை பெரும் அவதிகொள்ள வைக்கின்றது.

இந்த இயற்கை சீற்றத்தில், தீபகற்பத்தின் கிழக்கு கரை மாநிலங்கள் உட்பட இன்னும் பல மாநில மக்கள் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்படுவதோடு, சமயங்களில் உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது.

இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ளும் போது, பொது மக்கள் 3P -- அதாவது PLAN, PREPARATION, PROTECTION - திட்டமிடுதல், தயார்நிலை, பாதுகாப்பு போன்றவற்றில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் மலேசிய அனைத்துலக தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் கே. பாலசுப்ரமணியம்.

கடந்த 30 ஆண்டுகள், அவசரக் காலங்களில் பாதுகாப்பு, தேடல் மற்றும் மீட்பு பண்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வரும் கே. பாலசுப்ரமணியம் வெள்ள சூழலை எதிர்கொள்வதில், பரந்த அனுபவங்களைக் கொண்டிருக்கின்றார்.

பூகம்பம், நிலச்சரிவு, சுனாமி போன்ற காலக்கட்டங்களில் தேடல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்ட பாலசுப்ரமணியம், வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாக்கும் வழிமுறைகளை மக்களுக்கு ஆலோசனையாக முன்வைத்தார்.

திரெங்கானு மற்றும் கிளந்தான் போன்ற மாநிலங்களில் வெள்ளத்தை அடிக்கடி எதிர்நோக்கும் மக்கள் எப்போதுமே, இக்காலக்கட்டத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், இயற்கை பேரிடர்களின் அசம்பாவிதங்களை எதிர்கொள்ளும் விதமாக வீடு மற்றும் கார்களுக்கு முன்கூட்டியே காப்புறுதி எடுத்து வைப்பதும் அவசியம்.

அதோடு, திடீர் மழை மற்றும் வெள்ளக் காலங்களில், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அரசாங்க அறிவிப்புகளையும் பாதுகாப்பு தரப்பின் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, வெள்ளக் காலத்தில் குழந்தைகள் மற்றும் வீட்டின் செல்லப் பிராணிகளின் பாதுகாப்பு குறித்து பேசிய பாலசுப்ரமணியம் அவர்களை தற்காக்கும் முறைகளையும் இவ்வாறு விவரித்தார்.

அவசர காலங்களில், குடும்பத்தாருடன் இருக்கும் போது, பதற்றத்தை தவிர்க்க இயலாது.

அதுபோன்ற தருணங்களில், வீட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகளை, பாலசுப்ரமணியம் விவரித்தார்.

அதேவேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பும் தன்னார்வ அமைப்புகளும் தனிநபர்களும் இப்போதிலிருந்தே அதற்கான ஏற்பாடுகளை செய்வது ஏதுவாக இருக்கும் என்று, வெள்ளப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பில் பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பாலசுப்ரமணியம் அதனைக் கூறினார்.

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)