உலகம்

இராணுவ ஆட்சிப் பிரகடனத்தை மீட்டுக் கொண்ட தென் கொரிய அதிபர்

04/12/2024 01:51 PM

சியோல் , 04 டிசம்பர் (பெர்னாமா) -- தென் கொரியாவில் இராணுவ ஆட்சிப் பிரகடனத்தை அறிவித்த முன்று மணி நேரங்களில், அதனை மீட்டுக் கொள்வதாக அந்நாட்டின் அதிபர்  யூன் சுக் யோல் தெரிவித்தார்.

மக்கள் மற்றும் எதிர்கட்ச்சிகள் இடையே கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இராணுவ ஆட்சிப் பிரகரடனத்தை மீட்டுக் கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார்.

இராணுவ ஆட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தன.

இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து 190 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அதிகாலை மணி 4.30-க்கு தொலைகாட்சி வழி உரையாற்றிய யூன் சுக் யோல் இது குறித்த அறிவிப்பை செய்தார்.

''மரியாதைக்குரிய மக்களே, நேற்றிரவு 11 மணியளவில், அரசாங்கத்தின் அத்தியாவசிய செயல்பாடுகளை முடக்கி, ஜனநாயகத்தின் அரசியலமைப்பு ஒழுங்கை சிதைக்க முயற்சிக்கும் சட்ட விரோத சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொருட்டு நான் இராணுவச் சட்டத்தை அறிவித்தேன். இருப்பினும், சற்று முன்பு, நாடாளுமன்றம் இராணுவச் சட்டத்தை நீக்கக் கோரியது. எனவே இதற்காகக் களமிறக்கப்பட்ட இராணுவப் படைகளைத் திரும்பப் பெற நான் உத்தரவிட்டேன்,'' என்றார் அவர்.

நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் கட்டுப்படுத்துவதாகவும், அவை வட கொரியாவின் சித்தாந்தங்களுக்கு துணை போவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இவையே, இராணுவ ஆட்சிப் பிரகரடனத்திற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்கட்சிகள் நெருக்குதல் அளித்து வருகின்றனர்.

1980-ஆம் ஆண்டுக்கு பிறகு, தென் கொரியாவில் முதல் முறையாக இராணுவ ஆட்சிக்கான பிரகனடம் செய்யப்பட்டு, நாட்டில் அமைதியை சீர்குழைக்க அதிபர் முயற்சித்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இராணுவ ஆட்சிக்கான பிரகனடம் மீட்டுக் கொள்ளப்பட்டாலும், 2022-ஆம் ஆண்டு தொடங்கி அந்நாட்டின் அதிபராக சேவையாற்றி வரும் யூன் சுக் யோல், இனி நாட்டை அமைதியான முறையில் வழி நடத்த இயலாது என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)