பொது

110 கோடி ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகளுடன் பிரதமரின் இங்கிலாந்துக்கான பயணம் நிறைவடைந்தது

18/01/2025 04:49 PM

லண்டன், 18 ஜனவரி (பெர்னாமா) -- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இலக்கவியல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 110 கோடி ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகளை வெற்றிகரமாக கவர்ந்ததோடு, பிரதமரின் இங்கிலாந்துக்கான ஐந்து நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் இன்று நிறைவடைந்துள்ளது.

விமான பொருட்கள் மற்றும் உபரி பாகங்கள், தளவாடம், உணவு, பானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரிங்கிட்டிலான ஏற்றுமதிக்கான சாத்தியம் உள்ளதை நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.

இங்கிலாந்து அரசாங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் மலேசியாவின் பொருளாதாரத்தில் அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் இந்த வளர்ச்சி காட்டுகிறது.

இங்கிலாந்தில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற பல பெரிய நிறுவனங்களுடனும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்புகளை நடத்தினார்.

மலேசியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் அதன் பிரதமர் கியர் ஸ்டார்மர் உடனான சந்திப்புகள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, இங்கிலாந்திற்கான தமது பயணம் நிறைவடைந்ததும் அன்வார், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு நாள்களுக்கு பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

பிரதமர் பதவியை ஏற்றதில் இருந்து அன்வார் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும் என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பெல்ஜியத்துடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் மலேசியாவின் இருவழி உறவை நெருக்கமாக்கும் நோக்கத்தில் இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

மலேசியாவிற்கும் பெல்ஜியமிற்கு பலனை அளிக்கும் வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து ஒத்துழைப்பு முயற்சிகளை தீவிரப்படுத்த, கருத்து பரிமாறிக் கொள்ள மற்றும் இருவழி உறவை விவாதிக்க அப்பயணத்தின்போது பிரதமர் அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவையும் சந்திக்க உள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)