உலகம்

சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ள சயிஃப் அலி கான்

18/01/2025 06:26 PM

பாந்த்ரா, 18 ஜனவரி (பெர்னாமா) -- மும்பை, பாந்த்ரா நகரில் உள்ள தமது இல்லத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியின்போது, கத்தி குத்துக்கு ஆளான ஹிந்தி திரைப்பட நடிகர் சயிஃப் அலி கான் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை சீரடைந்து வரும் வேளையில் ஓய்வு எடுப்பதற்காக அவரைக் காண வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக லீலாவதி மருத்துவமனை நடவடிக்கைப் பிரிவ் தலைமை அதிகாரி நிராஜ் உத்தாமணி தெரிவித்தார்.

சயிஃப் அலி கானிற்கு வழக்கம்போல உணவு வழங்கப்படுகிறது.

சுமார் 70 ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள 54 வயதுடைய சயிஃப் , வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆறு கத்தி குத்து காயங்களுக்கு ஆளானார்.

கத்தியைக் கொண்டு தம்மை தாக்க வந்தவருடன் துணிச்சலுடன் போராடிய சயிஃபின் செயல் குறித்து சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அவரைத் தாக்கிய சந்தேக நபர் படிகட்டு வழியாக தப்பியோடும் காட்சி மறைக்காணி பதிவில் காண முடிந்தது.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)