பஞ்சாப், 18 ஜனவரி (பெர்னாமா) -- மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஐரோப்பாவை அடையும் நோக்கில் புலம்பெயர்பவர்கள் புறப்படும் முக்கிய இடமாக மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரை பகுதி உருவெடுத்துள்ளது.
இந்த உயிரிழப்புகள் குறித்து வருத்தம் தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ஆள்கடத்தலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார்.
கேனரி தீவுகளுக்குச் செல்லும் வழியில் 50 பேர் இறந்துவிட்டதாக ஸ்பெயினைத் தளமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குழுவான ''வாக்கிங் போர்டர்ஸ்'' குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 44 பேர் பாகிஸ்தானியர்கள் என்று அக்குழு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து சர்தாரி அவ்வாறு கூறியுள்ளார்.
அந்த புலம்பெயர்ந்தோர் ஜனவரி 2ஆம் தேதி தங்களின் பயணத்தைத் தொடங்கியதாகவும் ''வாக்கிங் போர்டர்ஸ்'' தெரிவித்துள்ளது.
மொரிட்டானியாவிலிருந்து சில பாகிஸ்தானியர்கள் உட்பட 80 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, டக்லா அருகே கவிழ்ந்ததாக மொராக்கோவில் உள்ள தனது தூதரகம் தகவல் தெரிவித்ததை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)