புதுடெல்லி, 16 பிப்ரவரி (பெர்னாமா) -- இந்தியா, புதுடெல்லி இரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 10 பெண்களும் மூன்று சிறுவர்களும் அடங்குவர்.
கும்பமேளாவுக்கு செல்வதற்காக இரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள், இரயிலில் ஏற முற்பட்டபோது, இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
நடைமேடையில் காத்திருந்த பயணிகள் ஒருசேர இரயிலில் ஏறுவதற்கு முயன்ற போது கடுமையான கூட்டம் நெரிசல் ஏற்பட்டதாகத் துணை போலீஸ் ஆணையர் கே.பி.எஸ். மல்ஹோத்ரா தெரிவித்தார்.
"இரண்டு ரயில்கள் தாமதமாக வந்தன, பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒரு சிறிய இடத்தில் அதிகமானோர் கூடும் சூழ்நிலை ஏற்பட்டது. அதில் சிலர் காயமடைந்தனர்," என்று கூறினார்.
நேற்றிரவு மணி 10 அளவில் ஏற்பட்ட இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மைய காலமாக, கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி இரயில் நிலையத்தில் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், இரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டபோதும், தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)