பொது

கடற்படை அதிகாரி கொலை வழக்கில் அறுவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை தள்ளுபடி

28/02/2025 08:42 PM

புத்ராஜெயா, 28 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடற்படை அதிகாரி சுல்ஃபர்ஹான் ஒஸ்மான் சுல்கர்நயினுக்கு மரணம் விளைவித்த, மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகம், யூ.பி.என்.எம்-இன் முன்னாள் மாணவர்கள் அறுவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

எனினும், இது நோக்கமற்ற கொலை என்பதால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்நீதிமன்றம் நிலைநிறுத்தியது.

கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ நோர்டின் ஹசான் மற்றும் டத்தோ அப்துல் காரிம் அப்துல் ஜாலில் ஆகியோரை உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதி குழுவிற்கு மலாயா தலைமை நீதிபதி டத்தோ ஶ்ரீ ஹஸ்னா முஹமட் ஹஷிம் தலைமையேற்றார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த மரணத் தண்டனையை ரத்து செய்யும்படி குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கி இக்குழ அம்முடிவை எடுத்தது.

சுல்ஃபர்ஹான் ஒஸ்மானை கொலைச் செய்ததற்காக, அந்த அறுவருக்கும் மரணத் தண்டனை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை 23-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

அவர்கள் அனைவரும் முன்னதாக எதிர்நோக்கிய குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-ஐ மீண்டும் மாற்றுவதற்கு அரசுத் தரப்புக்கு குறுக்கு விசாரனை மேல்முறையீட்டை மேற்கொள்ள நீதிபதி டத்தோ ஹடாரியா சைட் இஸ்மாயில் தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதி குழு அனுமதித்ததைத் தொடர்ந்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]