பொது

இன்று தொடங்கி தினசரி விளக்கமளிப்பு கூட்டத்தை நடத்த பிரதமர் இணக்கம்

01/03/2025 04:14 PM

புத்ராஜெயா, 01 மார்ச் (பெர்னாமா) --    அதிகாரப்பூர்வமான தளங்களிலிருந்து துல்லியமான, உண்மையான தகவல்களை மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக பிரதமர் அலுவலகத்தில், இன்று தொடங்கி தினசரி விளக்கமளிப்பு கூட்டத்தை நடத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக் கொண்டுள்ளார்.

தினசரி நடத்தப்படும் இக்கூட்டத்தின் மூலம் சமீபத்திய பிரச்சனைகள், முக்கிய கொள்கைகள் மற்றும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அண்மைய தகவல்கள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்று பிரதமரின் மூத்த பத்திரிக்கை செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா கூறினார்.

''பொதுமக்களிடம் அவதூறு மற்றும் தவறான தகவல்கள் பரப்பபடுவதைத் தவிர்க்கும் ஒரு முக்கிய நடவடிக்கை இதுவாகும். நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையே வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்ற மடானி அரசாங்கத்தின் திட்டத்திற்கேற்ப இம்முயற்சி அமைந்துள்ளது. அதோடு, உண்மையான மற்றும் துல்லியமான ஆதாரங்களின் மூலம் சில தகவல்களின் உண்மையைச் சரிபார்க்கும் நடைமுறையை வளர்ப்பதற்கும் இது நடத்தப்படுகின்றது'', என்று அவர் கூறினார்.

தகவல் தொடர்பு முயற்சி மட்டுமின்றி அரசாங்கம் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு அமைச்சிலும் Ihya’ Ramadan திட்டத்தைப் பிரதமர் செயல்படுத்துவார் என்று துங்கு நஸ்ருல் தெரிவித்தார்.

அதே நேரத்தில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர், ரமலான் மாதம் முழுவதும் பல மாநிலங்களுக்குச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)