விளையாட்டு

2026 சுக்மா போட்டியில் கபடி இடம்பெறவில்லை; தொடர் முயற்சிகளில் மலேசியா கபடி சங்கம்

10/04/2025 05:36 PM

கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) --    தமிழர்களின் தொன்று தொட்ட பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடியை, 2026-ஆம் ஆண்டு சுக்மா போட்டியில் இடம்பெறச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கபடியும் சிலம்பமும் சுக்மா போட்டியில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை, அண்மையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ ஓர் நிகழ்ச்சியில் அதிகார்ப்பூர்வமாக அறிவிப்பு செய்திருந்தார்.

எனினும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சுக்மா போட்டியில், கபடி பட்டியலில் இடம்பெறாதது, தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக, மலேசியா கபடி சங்கத்தின் பொதுச் செயலாளர், ஏ.எஸ்.பி அருள் பிரகாஷ் பாலகிருஷ்ணன் கூறினார்.

''சுக்மா 2026, சிலாங்கூரில் நடைபெற வேண்டிய போட்டிக்கு நாங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றோம். பல கடிதங்களை அனுப்பி கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், கபடி சுக்மாவில் உள்ளதா என்பது இன்று வரையிலும் கேள்விக்குறியாகவே உள்ளது. கபடி என்பது கைப்பிடி. நமது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. எவ்வாறு தமிழ்ப்பள்ளி நமக்கு ஒரு கண்ணாக உள்ளதோ, அதேபோல பாரம்பரிய விளையாட்டுகளும் மற்றொரு கண் போன்றது. அதனை பாதுக்காக்க வேண்டியது நமது கடமை'', என்று அவர் கூறினார்.

கபடியைத் தொடர்ந்து, சுக்மாவில் இடம்பெற செய்வதற்கான முயற்சியாக மலேசியா கபடி சங்கம் கடிதங்களின் வாயிலாக விளையாட்டுத் துறையை அணுகி வருவதாக அவர் கூறினார்.

தங்களின் இம்முயற்சிக்கு பொதுமக்கள் உட்பட அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு, ஏ.எஸ்.பி அருள் பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

''ஒரு கை தட்டினால் ஓசை வராது. மாறாக, பல கை தட்டினால் தான் ஓசை வரும் அவர்களுக்கும் கேட்கும். எனவே, பொதுமக்களிடமும் நாங்கள் இதற்கான உதவியைக் கேட்கின்றோம். அதேபோல அரசியல் தலைவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களும் எங்களுடன் சேர்ந்து கைத்தட்டினால், சுக்மா 2026-யில் கபடி போட்டி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது'', என்றார் அவர்.

இதனிடையே, கபடி போட்டி, இளைஞர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்று அருள் பிரகாஷ் கூறினார்.

இருப்பினும், இவ்வகை விளையாட்டுகளுக்கு இப்போதே அங்கீகாரம் தர மறுத்துவிட்டால், வருங்காலத்தில் இதன் மீது இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது பெருவாரியாக குறைந்துவிடும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)