சிறப்புச் செய்தி

மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழோடு விளையாடு 3.0 புதிர் போட்டி

13/04/2025 06:38 PM

கெலுகோர், 13 ஏப்ரல் (பெர்னாமா) -- பொது மற்றும் தனியார்  உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழோடு விளையாடு 3.0 புதிர் போட்டி மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (யூ.எஸ்.எம்)-இல் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாண்டு புதிர் போட்டியாக மட்டும் இல்லாமல் மாணவர்களின் படைப்புகளுக்கு வாய்ப்பளிக்கும் தளமாகவும் இப்போட்டி அமைந்ததாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

யூ.எஸ்.எம்-இன் இந்திய பண்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் அக்னி சிறகுகள் குழுவின் ஏற்பாட்டிலான, தமிழோடு விளையாடு 3.0, டி.கே.யூ மண்டபத்தில் காலை மணி 7 தொடங்கி மாலை 5.30 வரை நடைபெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள உயர்க்கல்வி கழக மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களது தமிழ் ஆற்றலை வெளிப்படுத்தியதாக தமிழோடு விளையாடு 3.0 புதிர் போட்டியின் ஏற்பாட்டு குழு இயக்குநர் சரண்யா குணாளன் தெரிவித்தார்.

இதில் வெற்றியாளர்களுக்கு ரொக்க பணமும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டதாக அவர் விவரித்தார்.

''இந்த போட்டியில் முதல் நிலையில் இருந்து நான்காம் நிலை வரை வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. அதே வேளையில், மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், ஐந்தாம் நிலையில் இருந்து பத்தாம் நிலை வரை வெற்றிப் பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது. இப்போட்டிக்கு மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களிடமிருந்தும் நல்ல ஒரு ஒத்துழைப்பு கிடைத்தது,'' என்றார் சரண்யா.

இதனிடையே, இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

''மொழிக்கு முக்கியத்தும் கொடுக்கும் ஒரு போட்டியாக இது அமைந்திருக்கின்றது. திருக்குறள், புதிய ஆத்திச்சூடி உட்பட தமிழ் சார்ந்த புதிர் போட்டிகள் மறந்தவற்றை ஞாபகப்படுத்த வகை செய்தது,'' என்றனர்.

ஒரு குழுவில் இரு மாணவர்கள் என்ற அடிப்படையில்  32 குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்ற நிலையில், ஆதரவாளர்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் தெங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல் நிலையிலும், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகமான, உப்சி இரண்டாம் நிலையிலும் வெற்றி பெற்ற நிலையில்,  ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரி மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)