காசா, 14 ஏப்ரல் (பெர்னாமா) - காசாவில் மருத்துவ வசதிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உலக சுகாதார நிறுவனம், WHO தலைவர் Tedros Adhanom Ghebreyesus ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று அதிகாலை காசா நகரில் உள்ள Al-Ahli Arab மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து Tedros தமது சமூக ஊடக பதிவில் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
"அனைத்துலக மனிதாபிமான சட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் பாதுகாக்கப்படுகின்றன. சுகாதாரப் பாதுகாப்பு மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்" என்று டெட்ரோஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், உதவிகளுக்கான தடை நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் அறுவை சிகிச்சை துறை மற்றும் ஆக்ஸிஜன் பிரிவு உள்ளிட்ட முக்கிய மருத்துவ உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தின.
மேலும், அந்த வசதிகளை மூட வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தொடர் குண்டுவீச்சினால் ஒரு குழந்தை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும்போது உயிரிழந்தது.
மருத்துவமனை வளாகத்திற்குள் அமைந்துள்ள "ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை" குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)