சிறப்புச் செய்தி

மகிழ்ச்சியும் செழிப்பும் ஆண்டுதோறும் நிலைக்க விஷுவை வரவேற்றனர் மலையாள வம்சாவளியினர்

14/04/2025 07:41 PM

கோலாலம்பூர், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- கனி காணுதல், கை நீட்டம் போன்ற மரபு மாறாத அம்சங்களுடன் இன்று விஷு புத்தாண்டை இனிதே வரவேற்றனர் மலையாள வம்சாவளியினர்.

இன்றைய நாளின் மகிழ்ச்சியும் செழிப்பும் ஆண்டுதோறும் நீடித்திருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனும், இளம் தலைமுறையினருக்கு இப்பாரம்பரியத்தின் உன்னதத்தை உணர்த்தும் நோக்கத்துடனும், ஏ.எம்.எம்.ஏ எனப்படும் மலேசிய மலையாளிகள் சங்கத்தினருடன் இணைந்து, SFTMA எனப்படும் சிலாங்கூர், கூட்டரசு பிரதேச மலையாள சங்கத்தினர் இத்திருநாளை கொண்டாடினர்.

விஷு கனி காணுதல் இப்புத்தாண்டின் முதன்மை அம்சமாகத் திகழ்கிறது.

அரிசி மற்றும் நெல் வைத்து, தேங்காயை உடைத்து அதில் செம்பு, வெள்ளி காசு வைத்து, வெள்ளை, தங்க நிறங்களிலான உடைகளை வைத்து, சிறிய கண்ணாடி, கொன்றை பூ, நில விளக்கு, குங்குமச் சிமிழ் வைத்து, காய்கறிகளை படைத்து, இவை அனைத்தையும் பெரிய கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்து பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்பது விஷு புத்தாண்டின்போது மலையாளிகள் தொன்றுதொட்டு பின்பற்றும் ஒரு பாரம்பரியம் என்று சிலாங்கூர், கூட்டரசு பிரதேச மலையாள சங்கத் துணைத் தலைவர் வேலாயுதன் சாமி விவரித்தார்.

''கண்மூடி வந்து முதலில் கண்ணாடியில் தங்களின் முகத்தைக் காணும்போது, விஷுகனியில் உள்ள பணம், தங்கம், காய்கறி, பழ வகைகள் அந்த ஆண்டு முழுவதும் அவர்களுடன் இருக்கும் என்பது நம்பிக்கை. அதனைக் காணும்போது அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி, எபோதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கண்ணாடி வைக்கப்படுகிறது,'' என்றார் அவர்.

விஷு கொண்டாட்டத்தின் போது வயதில் மூத்தவர்கள் வெற்றிலை பாக்குடன் பணம் வைத்து வயதில் சிறியவர்களுக்கு வழங்குவதை கைநீட்டம் என்று கூறுவர்.

அதேவேளையில், விஷு கனியில் படைக்கப்பட்ட காய்கறிகளைக் கொண்டு 16 வகை பதார்த்தங்களைக் குடும்பத்தினரோடு சேர்ந்து சமைத்து, ஒன்றாக அமர்ந்து விஷு சாத்தியா எனும் உணவை உண்பதும் இவ்விசேஷத்தின் சிறப்பாகும் என்று மலேசிய மலையாளிகள் சங்கத் தலைவர் மனோகர் குருப் கூறினார்.

''விஷு என்றாலே சாத்தியா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல்வகை உணவு பதார்த்தங்கள் சுவையானதாக இருக்கும். பாயாசம் மேலும் சிறப்பு வாய்ந்தது,'' என்றார் அவர்.

தமது சிறுபருவ விஷு கொண்டாட்டத்திற்கும் தற்போதுள்ள கொண்டாட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டை பணி ஓய்வுப் பெற்ற தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை ஜெயலஷ்மி சுகுமாறன் பகிர்ந்துகொண்டார்.

''நான் சிறு குழந்தையாக இருந்தபோது இவ்வளவு விமரிசையாக விஷு கொண்டாடியதில்லை. நாங்கள் வளர வளரதான் நிறைய கற்றுக்கொண்டோம். தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் அதனைக் கொண்டு சேர்க்க எளிமையாக உள்ளது,'' என்றார் அவர்.

இதனிடையே, தற்போதுள்ள வேலை சூழல் காரணமாக, தலைமுறை நிறைந்து, குடும்பத்தினரோடு கொண்டாடப்படும் இத்திருநாளில் இளம் வயதினரை இணைப்பது சற்று கடினமாகவே இருக்கிறது.

எனினும், இதுபோன்ற மலையாள சமாஜங்களின் ஒத்துழைப்புடன் அவர்களையும் இக்கொண்டாட்டத்தில் ஈடுபட வைக்க முடிவதாக, மலேசிய மலையாளிகள் சங்கத் துணைத் தலைவர் டத்தின் ஶ்ரீ ஷைலா வேள்பாரி தெரிவித்தார்.

இன்று, கோலாலம்பூர், பங்சாரில், சிலாங்கூர், கூட்டரசு பிரதேச மலையாள சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விஷு புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]