அமெரிக்கா, 16 ஏப்ரல் (பெர்னாமா) -- கூடுதல் வரி தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது சீனாவின் பொறுப்பாகும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
கூடுதல் வரி குறித்து சீனாவே தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர அமெரிக்கா அல்ல என்று வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லெவெட் தெரிவித்தார்.
"சீனா எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். நாம் (அமெரிக்கா) அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டியதில்லை. சீனாவிற்கும் மற்ற நாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் மிகப் பெரியவர்கள். (சீனா பெரிய நாடு). சீனா நம்மிடம் இருப்பதை விரும்புகிறது. ஒவ்வொரு நாடும் நம்மிடம் இருப்பதை விரும்புகிறது. அமெரிக்க பயனீட்டாளர்கள் அல்லது வேறு வழியில் கூறினால், அவர்களுக்கு நமது பணம் தேவை", என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் Boeing விமான நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய ஒப்பந்த வாக்குறுதிகளை சீனா மீறியிருப்பதாக அந்நாடு குற்றம் சாட்டியிருக்கிறது.
போயிங் நிறுவனத்திலிருந்து புதிய விமானங்களைப் பெறுவதை நிறுத்தவும், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து உதிரி பாகங்கள் வாங்குவதை நிறுத்தவும் சீனா உத்தரவிட்டுள்ளதாக டிரம்பின் அறிக்கையை வெளியிடும் போது கரோலின் லெவெட் தெரிவித்தார்.
உலகின் முக்கிய நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்திருக்கும் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருள்களுக்கு 145 விழுக்காடு கூடுதல் வரிகளை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)