தாப்பா, 18 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆயர் கூனிங் சட்டமன்றத்தில் அமைதி, சுபிட்சம் மற்றும் ஒற்றுமை தொடர வேண்டும் என்ற சிந்தனையில், அத்தொகுதி மக்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதே சிந்தனையுடன், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தேசிய முன்னணிக்கு ஆதரவு செலுத்தும் மனநிலையில் பெரும்பாலான மக்கள் இருப்பதாக, ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்திருக்கின்றார்.
''இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், இப்பொழுது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்து இருக்கின்ற நான் தேசிய முன்னணியைச் சார்ந்தவராகவும், அதே நேரத்தில் மற்றொரு சட்டமன்றமாகிய சென்டரியாங் சட்டமன்றத்தை பிரதிநிதிக்கின்றவர் தேசிய முன்னணியைச் சார்ந்த ம.சீ,சவையும் சேர்ந்தவராகவும் இருக்கின்ற காரணத்தால், இந்த இருவரோடு இணைந்து வேலை செய்யக்கூடியவர் தேசிய முன்னணியில் இருந்து வந்தால்தான் சுபிட்சமான மேம்பாட்டிற்கும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் வலிவகுக்கும் என்பதை கருத்தில் கொண்டு இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தேசிய முன்னணியை ஆதரிப்பார்கள்,'' என்றார் அவர்.
இதனிடையே, ஆயர் கூனிங் சட்டமன்றத்தில் மண்டபங்கள், ஆலயங்கள், கல்வி உட்பட அடிப்படை வசதிகள் ஓரளவிற்கு திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாக டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்திருக்கின்றார்.
எனினும், நகர்புறம் மற்றும் புறநகர் பகுதியை உள்ளடக்கிய தொகுதியாக இது விளங்குவதால் இன்னும் சில வளர்ச்சித் திட்டங்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
''மிகச் சிறந்த கல்வி கற்றவர்கள் வேறிடங்களுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்ல வேண்டும். அது இல்லை என்றால், ஓரளவிற்கு தொழிற்கல்வியை கற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். இவை இரண்டிற்கும் போதுமான வாய்ப்புகள் இங்கே இருக்கின்றது,'' என்றார் அவர்.
மேலும், இங்குள்ள மக்கள், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சரவணன் தெரிவித்தார்.
இந்த ஒற்றுமையை இந்தியர்களும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
''இங்கு வசிக்கின்ற மலாய்க்காரர்களும் சீனர்களும் இனம் கடந்து சிந்திக்கின்றார்கள். கடந்த தேர்தல்களின் என்னை வெற்றிப் பெற செய்திருக்கின்றார்கள். அவர்கள் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்,'' என்றார் அவர்.
வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் அத்தகல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)