உலகம்

ஏமன் மீது மீண்டும் அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 12 பேர் பலி

21/04/2025 03:48 PM

ஏமன், 21 ஏப்ரல் (பெர்னாமா) --   ஏமன், சனாவில் உள்ள சந்தை ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலினால் பொதுமக்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினர்.

அந்நாட்டை குறிவைத்து இதுவரை அமெரிக்க நடத்திய மிக மோசமான தாக்குதலாக இது அமைவதாக ஏமன் சுகாதார துறை அறிவித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்புக் குழுவினர் இன்னும் தீவிரமாகத் தேடி வருவதால் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சனா நகரின் மையப்பகுதியில் உள்ள பொதுச் சந்தையைக் குறிவைத்து, அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்த அமெரிக்காவின் இந்நடவடிக்கையை ஹவுதி படை கண்டித்துள்ளது.

இருப்பினும், இச்சம்பவம் குறித்து எந்த அறிக்கையையும் அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை.

மற்றுமொரு நிலவரத்தில், காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் 44-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2023-ஆம் ஆண்டு அக்டோபரில் கலவரம் வெடித்ததில் இருந்து பலியானவர்களின் எண்ணிக்கை 51,201 ஆக உயர்ந்துள்ளதாக காசா அதிகாரிகள் அறிவித்தனர்.

இதில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்று காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 16,869 ஆக அதிகரித்துள்ளது.

காசா பகுதியின் தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் அகதிகள் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதல்களே இதற்குக் காரணமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)