பொது

மீண்டும் முழுமை பெறாத ஜாலூர் ஜெமிலாங் விவகாரம்; விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

22/04/2025 02:26 PM

புத்ராஜெயா, 22 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கண்காட்சி ஒன்றில் முழுமை பெறாத ஜாலூர் ஜெமிலாங்கைக் காண்பிக்கும் காணொளி தொடர்பில் உள்துறை அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில், ஒரு நாளிதழின் முதல் பக்கத்தில் முழுமையில்லாத ஜாலூர் கெமிலாங்கை பிரசுரம் செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை போலவே இந்த விசாரணையும் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

''இந்தக் கொடி பல்வேறு அர்த்தங்களையும் நோக்கங்களையும் கொண்ட தேசிய அடையாளத்தின் சின்னமாகும் என்பதை, இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகின்றேன். சமூகத்தினரிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய எந்தவோர் அலட்சியம், கவனக்குறைவு அல்லது மறதியும் தவிர்க்கப்பட வேண்டும்,'' என்றார் அவர். 

இன்று, உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, சின் சியூ நாழிதழ் மீதான விசாரணை குறித்து கருத்துரைத்த அவர், தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் விசாரணை மிகவும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சைஃபுடின் விளக்கினார்.

''சின் சியூ மீது நாங்கள் நடவடிக்கை எடுத்த பிறகு, பொதுமக்களும் அதே சம்பவம் குறித்து அறிந்துள்ளனர். எனவே, உள்துறை அமைச்சின் அதே செயல்முறையை அவர்களும் எதிர்கொள்வார்கள்,'' என்றார் அவர். 

சின் சியூ நாளிதழின் முதல் பக்கத்தில் முழுமையில்லாத ஜாலூர் கெமிலாங்கை பிரசுரம் செய்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, அதன் தலைமை செய்தி ஆசிரியரும் துணை தலைமை செய்தி ஆசிரியரும் தடுத்து வைக்கப்பட்டதாக கடந்த 17-ஆம் தேதி தொடங்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]