கோலாலம்பூர், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- புவி மற்றும் அதன் வளங்களைப் பாதுகாப்பதில் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ஆம் தேதி, உலக புவி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
சுற்றுச்சூழலின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இயற்கை வளங்களில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு பொறுப்புடன் செயல்படுவதையும் இந்நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
Clean and Renewable Energy எனும் கருப்பொருளில் இவ்வாண்டிற்கான உலக புவி தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது.
தற்போது பயன்படுத்தக்கூடிய எரிசக்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி, சுத்தமாகவும் சுற்றுச்சூழலுக்குப் பாதகம் ஏற்படாதவாறும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைப் பயன்படுத்தும் அவசியத்தை, இவ்வாண்டிற்கான கருப்பொருள் உணர்த்துகின்றது.
இன்றைய நவீன உலகில், எரிசக்தி உற்பத்தியில் fossile fuels எனப்படும் நிலக்கரி, மூல எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் பயன்பாடு அதிகமாக இருப்பதோடு, அது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகின்றார், இயற்கை வள, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சின் ஆலோசனை குழு உறுப்பினர் மோகேஷ் சபாபதி கூறினார்.
''43 விழுக்காடு தேசிய அளவில் நாம் இதை பயன்படுத்துகின்றோம். ஆக, நாம் இந்த நிலக்கரியை எரிக்கும்போது பலவகை ஆபத்து நிறைந்த வாயுக்கள் உருவாகுகின்றது. Greenhouse Gas Emissions என்று சொல்லக்கூடிய Carbon Dioxide, Martin Gas, Nitric Oxide, Chlorofluorocarbons. ஆக, இந்த வாயுக்கள்தான் மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது'', என்று அவர் கூறினார்.
பாதுகாப்பற்ற எரிவாயு, பருவநிலை மாற்றத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு குறித்து தற்போது அரசாங்கம் வழியுறுத்தி வருவதாக, அவர் கூறினார்.
மேலும், பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், அதனை செயல்படுத்துவதில் வெகுஜன மக்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக மோகேஷ் விவரித்தார்.
''உதாரணத்திற்கு, Rooftop Solar-யின் பயன்பாட்டை நமது வீட்டில் அல்லது வணிக தளங்களில் பொருத்துவதற்கு, அதிகம் செலவாகலாம். குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு. ஆக, இதுபோன்ற பொருளாதார அடிப்படையிலும் நிறைய மக்கள் அதை ஒரு சவாலாக பார்ப்பதோடு, அதனை முழுமையாக கடைப்பிடிக்க முடியாமல் போகின்றது'', என்றார் அவர்.
மேலும், இவ்வாண்டு ஆசியானுக்கு மலேசியா தலையேற்றிருக்கும் நிலையில், எரிசக்தி ஒத்துழைப்புக்கான ஆசியான் செயல் திட்டத்தின் மூலம் வட்டார அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக, அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இன்றைய இளைஞர்கள் சமூக ஊடகம் மற்றும் கல்வியின் வழியாக சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பெறுவதோடு, நெகிழிப் பைகளில் பயன்பாட்டை தவிர்ப்பது, மரங்கள் நடுவது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக, மோகேஷ் விவரித்தார்.
''கடந்த பத்து வருடத்தில் நிறைய இளைஞர்கள் தங்களின் வீடுகளில் சூரியக் கொள்கலன்(Solar Panel) பயன்படுத்துகின்றனர். அல்லது பசுமை எரிசக்தி பயன்பாடு, சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்கின்றனர். மேற்கல்வியைத் தொடருகின்றனர். கடந்த பத்து வருடத்தில் கூட இளைஞர்கள் முன்வந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகள் மற்றும் அரசு சாரா துறைகளில் பங்கேற்பதை நாம் பார்க்க முடிகின்றது'', என்று அவர் தெரிவித்தார்.
எனவே, 55-ஆவது ஆண்டாக அனுசரிக்கப்படும் உலக புவி தினம், மாற்றத்திற்கான ஒரு அடையாளமாக விளங்க வேண்டும் என்று மோகேஷ் சபாபதி வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)