பொது

லியாட் ஆற்று பாலத்திற்குப் பதிலாக பெய்லி பாலம் பயன்படுத்தலாம்

22/04/2025 02:54 PM

சுங்காய், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி பேராக், சுங்காயில் உள்ள லியாட் ஆற்று பாலம் இடிந்து விழுந்ததினால் அதற்கு மாற்றாக தற்காலிகமாக கட்டப்படும் பெய்லி பாலத்தை வரும் 30-ஆம் தேதி தொடங்கி பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தொடங்கப்படும், 46 மீட்டர் தூரம் கொண்ட அந்த பாலத்தின் கட்டுமான பணிகள், ஏப்ரல் 27-ஆம் தேதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் கூறியுள்ளார். 

இருப்பினும் அந்த பாலத்திற்கு செல்வதற்கான சாலை முதலில் பழுதுப்பார்க்கப்பட வேண்டும் என அவர் கூறினார்

''ஞாயிற்றுக்கிழமைக்குள் அப்பாலத்தின் கட்டுமானம் நிறைவடையும். ஆனால் பாலத்திற்குச் செல்ல ஒரு சாலை இருக்க வேண்டும் என்பதால், நாங்கள் அதை மேம்படுத்த விரும்புகிறோம். புதன்கிழமை (ஏப்ரல் 30), இந்த இரண்டு தனித்தனி இடங்களையும் இணைக்கும் பாலம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட வாய்ப்புள்ளது,'' என்றார் அவர். 

ஃபெல்டா சுங்கை க்லாவில் இடிந்து விழுந்த சுங்கை லியாட் பாலத்தின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அஹ்மாட் மஸ்லான் அதனைக் கூறினார்.

அங்குள்ள மக்களுக்கு இந்த பாலம் முக்கிய வழியாக இருப்பதால், திட்டமிட்ட கால அவசாகத்தைக் காட்டிலும். அதனை அமைக்கும் பணிகள் முன்னதாகவே முடிக்க முடியும் என்றும் மஸ்லான் நம்பிக்கை தெரிவித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]