பொது

மே 1 தொடங்கி பினாங்கு ஆளுநராக துன் ரம்லி நியமனம்

24/04/2025 05:44 PM

கோலாலம்பூர், 24 ஏப்ரல் (பெர்னாமா) - முன்னாள் மக்களவைத் தலைவரான துன் ரம்லி ஙா தாலிப் வரும் மே முதலாம் தேதி தொடங்கி பினாங்கு மாநில ஒன்பதாவது ஆளுநராக பொறுப்பேற்கிறார். 

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பினாங்கு மாநில ஆளுநர் நியனமக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிடமிருந்து அவர் அந்நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

அதே நிகழ்ச்சியில் 84 வயதுடைய ரம்லிக்கு துன் அங்கீகாரமுடைய, Seri Maharaja Mangku Negara எனப்படும் SMN விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

பினாங்கு மாநில அரசியலமைப்பின் முதலாவது சட்டவிதியின் படி இவ்வாண்டு மே முதலாம் தேதி தொடங்கி 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் பினாங்கு மாநில ஆளுநராக ரம்லி அப்பதவியில் நீடிப்பார். 

கடந்த 2021ஆம் ஆண்டு மே முதலாம் தேதியில் இருந்து அப்பதவியை வகித்த துன் அஹ்மட் ஃபுசி அப்துல் ரசாக்கிற்குப் பதிலாக ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

இச்சடங்கில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மற்றும் பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் யோவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)