புது டெல்லி, 24 ஏப்ரல் (பெர்னாமா) - இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற காலக் கெடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்நடவடிக்கை, அந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டும் வகையில் அமைந்துள்ளது.
தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருக்கிறார்.
"சார்க் விசா விலக்கு திட்டம், எஸ்.வி.இ.எஸ் விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எந்த எஸ்.வி.இ.எஸ் விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். எஸ்.வி.இ.எஸ் விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் கால அவகாசம் வழங்கப்படுகிறது,'' என்றார் அவர்.
புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் இந்தியாவை விட்டு ஒரு வாரத்திற்குள் வெளியேறவும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியாவின் முப்படை பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் இந்தியாவுக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானுடனான நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா நேற்று உடனடியாக ரத்து செய்தது.
''1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம், பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நம்பகத்தன்மையுடனும், மாற்ற முடியாத வகையிலும் ஆதரவளிப்பதை கைவிடும் வரை, உடனடியாக நிறுத்தி வைக்கப்படும்,'' என்று விக்ரம் மிஸ்ரி கூறினார்.
அதே வேளையில், அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும் என்றும் முறையான அனுமதியுடன் எல்லை கடந்து சென்றவர்கள் வரும் மே முதலாம் தேதிக்குள் அப்பாதை வழியாகத் திரும்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று, புது டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்த அறிவிப்புகளைச் செய்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)