விளையாட்டு

தமிழ்ப்பள்ளி மாணவிகள் & ஆசிரியர்களுக்கான கூடைப்பந்து போட்டி

28/04/2025 05:46 PM

ஷா ஆலாம், 28 ஏப்ரல் (பெர்னாமா) - காற்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டுகளைப் போன்று கூடைப்பந்து விளையாட்டிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில்,

நேற்று சிலாங்கூர் தேசிய வகை எமரல்ட் தமிழ்ப்பள்ளி மைதானத்தில், 12 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவையும் சிலாங்கூர் மாநில தலைமை ஆசிரியர் மன்றமும் ஒருங்கிணைந்து முதல் முறையாக ஏற்பாடு செய்திருந்த இந்த YB Tuan Prakash Sambunathan கிண்ணப் போட்டியில் மொத்தம் 26 மாணவர் குழுக்களும் 22 ஆசிரியர் குழுக்களும்  பங்கேற்றன.

இப்போட்டியை முன்னிட்டு  மாணவிகளும் ஆசிரியர்களும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்றைய போட்டியில் இருதரப்பினருமே தங்களின் திறனை முழுமையாக வெளிபடுத்தியதாக சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவையின் தலைவர் மு.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

"இப்போட்டியை நாங்கள் முதல் முறையாக ஏற்று நடத்தி இருந்தாலும் 48 குழுக்கள் இதில் பங்கேற்றிருந்தது எங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். பங்கேற்பாளர்களின் ஆர்வத்தின் நிமித்தம் ஆண்டுதோறும் இப்போட்டியை நடத்த விளையாட்டுப் பேரவை உத்தேசித்துள்ளது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து விளையாட்டில் சிறந்த விளங்க வேண்டும் என்பதே இப்போட்டியின் முதன்மை நோக்கமாகும்," என்று அவர் கூறினார்.

இப்போட்டியின் வழி, இனி பல தமிழ்ப்பள்ளிகளில் கூடைப்பந்து விளையாட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சுப்பிரமணியம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதனிடையே, வெறும் போட்டியாக மட்டுமின்றி மாணவர்களின் உடல்நலத்தைப் பேணும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கூடுதல் நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கேட்டுக் கொண்டார்.

இப்போட்டியில் மாணவர் பிரிவில், பூச்சோங் தமிழ்ப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்ற வேளையில், ஆசிரியர் பிரிவில் ஹைக்கோம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)