கோலாலம்பூர் , 30 ஏப்ரல் (பெர்னாமா) -- சூலு கும்பல் தொடர்பான உரிமைக்கோரல் வழக்கு விசாரணை, இவ்வாண்டு ஜூலை 7-ஆம் தேதி பிரான்ஸ், பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்விசாரணையில், மலேசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பின் செல்லுபடித்தன்மை மற்றும் தொடர்புடைய பல்வேறு சட்ட அம்சங்களை, பிரான்ஸ் நீதித்துறை ஆராயும் என்று சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் கூறினார்.
முதற்கட்ட தீர்ப்பின் அங்கீகாரத்தை, பிரான்ஸ் நீதிமன்றம் ரத்து செய்தது, இறுதி தீர்ப்பை, நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் நிராகரித்தது மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்காக நடுவர் கோன்சாலோ ஸ்டாம்பாவை குற்றவாளி என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் செய்த தீர்ப்பு ஆகியவை அதில் அடங்கும்.
சூலு கும்பலின் உரிமைக்கோரல் வழக்கு, மலேசியாவின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது.
அதோடு, மூன்றாம் தரப்பு நிதி எவ்வாறு மலேசியாவிற்கு எதிரான ஆதாரமற்ற கூற்றுகளை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதும் அம்பலமானது.
அதே நேரத்தில், தனியார் நடுவர் மன்றம், அரசாங்க சொத்துகளைக் கைப்பற்ற முயற்சித்ததையும் அது வெளிப்படுத்தியதாக டத்தோ ஶ்ரீ அசாலினா சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர், நடைபெற்றுவரும் சூலு உரிமைக்கோரல் வழக்கு குறித்த உத்திகளை வகுக்கவும் அண்மைய நிலவரங்களைப் பெறவும், பாரிஸில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் சட்டக் குழுவையும் சந்தித்துள்ளார்.
சூலு சுல்தானின் வாரிசுகள் என்று கூறும் எட்டு பிலிப்பைன்ஸ் நாட்டினர், சபா மாநிலம் தொடர்பான ஒரு பிரச்சனையில் மலேசியாவிலிருந்து கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களைப் பெற ஸ்பெயினில் நடுவர் மன்ற வழக்கு தொடுத்தனர்.
2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம், Madrid நீதிமன்றம் இவ்வழக்கின் நடுவராக ஸ்டாம்பாவை நியமித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)