சுரிக், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- சுவிட்சர்லாந்து, சுரிக்கில் நடைபெற்ற 2025 Grasshopper கிண்ண ஸ்குவாஷ் போட்டியில், தேசிய வீராங்கனை எஸ்.சிவசங்கரி இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.
இந்த வெற்றியின் வழி, ஸ்குவாஷ் விளையாட்டு பற்றிய புரிதல் தொடர்ந்து மேம்பட்டு வருவதோடு, சரியான பாதையில் தாம் பயணிப்பதாக சிவசங்கரி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
அதே உத்வேகத்தோடு, வரும் மே 9 தொடங்கி 17-ஆம் தேதி வரை அமெரிக்கா சிக்காகோவில் நடைபெறும் உலக வெற்றியாளர் போட்டியிலும் அவர் களமிறங்வுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், சிவசங்கரி உலகின் முதன் நிலை வீராங்கனையான எகிப்தின் நூரான் கோஹரிடம் 7-11, 12-14 மற்றும் 9-11 என்ற நிலையில் தோல்வியடைந்தார்.
அந்தப் போட்டியின் பட்டத்தை இழந்த போதிலும், உலக தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் அவர் இறுதிவரை கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார்.
கிராஸ்ஹாப்பர் கிண்ண போட்டி முழுவதும் உற்சாகமாக விளையாடிய சிவசங்கரி, 42 நிமிடங்கள் நீடித்த அந்த இறுதிப் போட்டியில் சிறந்த அனுபவத்தைப் பெற்றதாக கூறியுள்ளார்.
26 வயதான இவர், சிக்காகோவில் நடைபெறவிருக்கும் போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை Marta டொமிங்குஸ்க்கு எதிராக முதன் முறையாக விளையாடவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)