பொது

6 மாதங்களில் புகைப்பிடித்தல் கட்டுப்பாடு தொடர்பிலான 43,455 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன

01/05/2025 05:55 PM

காஜாங், 01 மே (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை, 2024-ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைப் பிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம், சட்டம் 852 அமல்படுத்திய காலக்கட்டத்தில் புகைப்பிடித்தல் கட்டுப்பாடு தொடர்பாக 43,455 அறிவிக்கைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

பல்வேறு குற்றங்களுக்காக 1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்து 350 ரிங்கிட் மதிப்பினான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் டாக்டர் சுல்ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார்.

விளையாட்டுப் பொருள்கள் அல்லது உணவைப் போன்று புகைப்பிடிக்கும் பொருட்களை பொட்டலமிட்டது தொடர்பாக செக்‌ஷன் 15(1) இன் கீழ் 46 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக அவர் கூறினார்.

புகைப்பிடிக்கும் பொருள்களை இணையம் வழி மேற்கொள்ளப்படும் விற்பனையைத் தடைசெய்யும் விற்பனைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 2024, விதிமுறை 3-இன் கீழ் 20 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன.

சமூகத்தில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொது சுகாதாரத்திற்கான புகைப் பிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்நடவடிக்கை அமைந்துள்ளதாக டாக்டர் சுல்ஹிசாம் விவரித்தார்.

புதன்கிழமை இரவு காஜாங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)