ஜார்ஜ்டவுன், 01 மே (பெர்னாமா) - ஒரு முட்டைக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை இன்று தொடங்கி 10 சென்னில் இருந்து ஐந்து சென்னுக்கு குறைக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உதவித்தொகை முற்றாக அகற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் அடிப்படை உணவுபொருட்களுக்கான பட்டியலில் முட்டை முதன்மையானது என்பதால், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு கொள்முதல் மற்றும் சில்லறை வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களையும் கலக்கமடையச் செய்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் முட்டை உற்பத்தித் துறை நிறைவாக இருப்பது மட்டுமின்றி அதன் உற்பத்தி செலவினங்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட பின்னரே, இம்முடிவை எடுத்துள்ளதாக அரசாங்கத் தரப்பினர் நேற்று தெரிவித்திருந்தனர்.
ஆனால், இந்த முடிவு நடுத்தர மக்களையும் வறிய நிலையிலானவர்களையும் பெருமளவில் பாதிக்கக்கூடும்.
ஏனெனில், வசதி குறைந்தவர்களின் வீட்டில் முட்டைதான் பெருமளவில் அடிப்படை உணவாக இருக்கும்.
உதவித்தொகை நிறுத்தப்பட்டு விலை உயர்த்தப்பட்டால் இப்போதைய நிலையைக் காட்டிலும் முட்டை வாங்குவற்கு அவர்கள் கூடுதல் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்படும் என்று அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.
''உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் ஐவர் இருந்தால் அவர்கள் தினமும் ஒரு முட்டையை வாங்கினால், மாத இறுதியில் நீங்கள் கூடுதலாக 15 ரிங்கிட் வரையில் பணம் செலவிட நேரிடும். மேலும் உதவித் தொகையும் குறைக்கப்பட்டுள்ளதால் காலப் போக்கில் முட்டை சம்பந்தப்பட்ட அனைத்து உணவுகளும் விலையேற்றம் அடைவதற்கு சாத்தியம் உள்ளது. அப்போது நாம் உணவகத்தையும் அதிகமாக சாட முடியாத,'' என்று அவர் குறிப்பிட்டார்.
அதிலும், ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் முட்டை விலையைக் காரணம் காட்டி சில உணவகங்களில் NASI LEMAK, ROTI TELUR, ROTI BAKAR TELUR, TELUR SEPARUH MASAK போன்ற முட்டை தொடர்புடைய உணவுகளின் விலையை உயர்த்துவதற்கான சாத்தியம் உள்ளதையும் சுப்பாராவ் கோடிகாட்டினார்.
மேலும், அணிச்சல், இனிப்புப் பலகாரங்கள் செய்யும் சிறு கடைகள் தொடங்கி, உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பெரிய அளவிலான நிறுவனங்கள் வரை, தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு கணிசமாக விலையை அதிகரிக்கலாம் என்று கூறிய சுப்பாராவ்...
விலை அதிகரிக்கப்பட்டாலும், புரதச் சத்து அதிகம் இருப்பதால் முட்டை பயன்பாட்டில் சுணக்கம் இருக்காது என்றும் தெரிவித்தார்.
எனவே, அனைத்து தரப்பினரின் குறிப்பாக வசதி குறைந்தவர்களின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இம்முடிவை மறு பரிசீலனை செய்யவோ அல்லது அதற்கு மாற்றாக வேறு அறிவிப்பை வெளியிடவோ அரசாங்கம் முனைய வேண்டும் என்று பயனீட்டாளர்களின் சார்பில் தாம் கேட்டுக் கொள்வதாக சுப்பாராவ் கூறினார்.
இதனிடையே, ரஷ்யா - உக்ரேன், போர் சமயத்தில் முட்டை உற்பத்திக்கான விலைகள் உயர்த்தப்பட்டதால், அரசாங்கம் முன்னதாக இந்த உதவித்தொகையை வழங்கி இருந்ததையும் சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)