சிறப்புச் செய்தி

உள்ளூர் கலைஞர்களும் அவர்களுக்கான அங்கீகாரமும்

02/05/2025 07:42 PM

கோலாலம்பூர், 02 மே (பெர்னாமா) -- தம்மை சுற்றிய விசயங்களில் ஏற்படும் தாக்கங்கள், ஒருவரை கவலையடைய வைத்து மன அழுத்ததிற்கு ஆளாக்கும் நிலையில்..

இன்றைய வாழ்வில் அது மிக விரைவில் ஒருவரை கட்டிப்போட்டு, அவரை கட்டுப்பாடற்ற நிலைக்கு கொண்டு சென்று சில விபரீத முடிவுகளையும் எடுக்க வைக்கின்றது.

அதில், கலைத்துறையில் உள்ள சில பலவீனங்களும் விவகாரங்களும் கலைஞர்களை மன அழுத்ததிற்கு கொண்டு செல்வதை மறுப்பதற்கில்லை என்பதால் அது தொடர்பில் தீவிர நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர், நாட்டின் கலைத்துறையில் நன்கு அறிமுகமான கலைஞர்கள் சிலர்.

எத்தனை சோகங்கள் நெஞ்சோடு இருந்தாலும், அதனை தனக்குள்ளே தாழிட்டு, தங்களின் படைப்புகள் வழி, கலைக்காக, கலைஞர்கள் மக்களை மகிழ்விக்கின்றனர்.

ஆனால், மலேசியாவில், தமிழக கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உள்ளூர் கலைஞர்களுக்கு இல்லை என்றும், சிறந்த கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் மேடை நிகழ்ச்சிகளுக்கு 500 பேரைத் திரட்டுவது கடினமாகி வருவது பலரின் குறைபாடாகாவே இருக்கின்றது.

இந்தியர்கள் அதிகம் வாழ்ந்த பெரும்பாலான தோட்டப்புறங்களில் நிச்சயம் ஒரு இசைக் குழுவும் 10,15 கலைஞர்களும் இருந்தபோது, மக்கள் வழங்கிய பேராதரவு அவர்களை பல காலத்திற்கு அத்துறையில் நிலைத்திருக்கச் செய்தது.

ஆனால், இன்றோ அக்கலைஞர்களின் வாரிசுகள் அத்துறையைத் தொடர்ந்து தற்காக்கவே போராட்டமாகவே உள்ளது.

அதேவேளையில், சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டுமே வாய்ப்புகள் சென்று சேரும்போது, படிப்படியாக வந்தவர்களின் எதிர்காலம் இங்கு கேள்விகுறியாவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருப்பது போல, மலேசியாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று சங்கங்கள் இருப்பின், கலைஞர்களுக்கான பிரச்சனைகள் கண்காணிக்கப்பட்டு தீர்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டின் கலைஞர்களுக்கான வாய்ப்புகளும் ஆதரவுகளும் உள்ளூரில் குறையும் போது, வருமானம் பாதிக்கப்பட்டு, பொருளாதர ரீதியில் பெரும் நெருக்கடியை கலைஞர்கள் சந்திக்க நேரிடுவதால்...

மேற்குறிப்பிட்ட கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று பெர்னாமா செய்திகளின் கலை சங்கமம் அங்கத்தில், இன்றைய கலைத்துறையின் நிலை தொடர்பில் அவர்கள் அதனைப் பகிர்ந்துக்கொண்டனர்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)