பொது

உள்ளூர் கலைஞர்களுக்கு மடானி அரசாங்கம் ஆதரவு - பிரதமர்

03/05/2025 04:34 PM

புத்ராஜெயா, 03 மே (பெர்னாமா) -- நாட்டின் கலைத்துறையைச் சார்ந்தவர்கள் சிறந்த மற்றும் உயர்தரமான படைப்புகளை உருவாக்குவதற்கு மடானி அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தும்.

புத்ராஜெயாவில், நேற்று கலைஞர் டத்தோ எம்.நசீர் உடனான சந்திப்பின் போது நடந்த பேச்சு வார்த்தையில் அரசாங்கத்தின் உறுதிப்பாடு தொடர்பில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் படைப்புகள், கலைகள் மற்றும் கலாச்சாரம் குறித்து விவாதிக்க சிறந்த கலைஞர் டத்தோ எம்.நசீர் உடனான நடந்த சந்திப்பை டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நாட்டின் இசைத் துறையில் தொடர்ந்து பணியாற்றுமாறு நசீரிடம் பிரதமர் தமது விருப்பத்தை முன் வைத்தார்.

பாடகர் மற்றும் இசையமைப்பாளராக மட்டுமின்றி, நடிகர், பாடலாசிரியர் மற்றும் கலை இயக்குநராக அனுபவம் பெற்றிருக்கும் நசீர், உள்ளூர் பொழுதுபோக்கு உலகில் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் பெரிதும் பங்களித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)