விளையாட்டு

சுடிர்மான் கிண்ணம்; அரையிறுதியில் தென் கொரியா

03/05/2025 07:12 PM

சியாமென், 03 மே (பெர்னாமா) --   சுடிர்மான் கிண்ண பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை 3-1 என்ற நிலையில் வீழ்த்தி, தென் கொரியா அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியின் மூலம் தென் கொரியா இந்தோனேசியாவை அரையிறுதி ஆட்டத்தில் சந்திக்கும் வேளையில், மற்றுமோர் அரையிறுதியில் பரம வைரீகளான சீனாவும் ஜப்பானும் களம் காணவிருக்கின்றன.

கலப்பு இரட்டையர் பிரிவில் தென் கொரியாவின் சியோ சியுங் ஜே - சே யூ ஜங் ஜோடி, டென்மார்க்கின் ஜெஸ்பர் டாஃப்ட் - அமாலி மாகெலுண்ட் இணையை 21-17, 21-13 என்று நேரடி செட் கணக்கில் வீழ்த்தி ஆட்டத்தை அமோகமாகத் தொடங்கியது.

அதன் பின்னர், உலகின் முதன் நிலை வீராங்கனையான ஆன் சே யங்கும் மகளிர் ஒற்றையர் பிரிவில் 21-8, 21-7 என்று நேரடி செட்களில் ஆட்டத்தை வென்றார்.

அதனைத் தொடந்து, ஒரே ஓர் ஆட்டத்தை வெல்லும் வாய்ப்பை டென்மார்க் பெற்றது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சன் 21-17, 20-22 மற்றும் 21-12 என்ற புள்ளிகளில் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின்னைத் தோற்கடித்தார்.

இருவருக்கும் இடையே கடும் சவாலாக அமைந்திருந்த இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் வரை நீடித்தது.

இறுதியாக, விட்ட இடத்தைப் பிடிக்க போராடிய தென் கொரியா மகளிர் இரட்டையர் பிரிவில் மீண்டும் வெற்றியை நிலைநாட்டியது.

அந்நாட்டின் பேக் ஹா நா - லீ சோ ஹீ ஜோடி 21-7, 21-3 என்ற நிலையில், நடஸ்ஜா அந்தோனிசென் - அலெக்ஸாண்ட்ரா போஜே இணையை வீழ்த்தியதன் அரையிறுதியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)