புக்கிட் காயு ஹித்தாம், 03 மே (பெர்னாமா) -- புக்கிட் காயு ஹித்தாம்மில் உள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS மற்றும் தாய்லாந்து, சடாவ்வில் உள்ள சுங்கம், குடிநுழைவு, தனிமைப்படுத்தும் வளாகம், CIQ-ஐ இணைக்கும் சாலை கட்டுமானப் பணிகள், திட்டமிட்டதைக் காட்டிலும் முன்னதாகவே நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 கோடியே 15 லட்சத்து 70,000 ரிங்கிட் மதிப்பிலான அத்திட்டத்தின் பணிகள், கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வரை 47 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
''இந்தத் திட்டத்திற்கான தள கையகப்படுத்தல் 2024-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதியாகும். இவ்வாண்டு செப்டம்பரில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், குத்தகையாளர் மற்றும் இந்தத் திட்டத்துடன் தொடர்புடையவர்களால் இது சற்று முன்னதாகவே முடிக்கப்படலாம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அது நல்ல செய்தி. நாம் உண்மையிலேயே அதை முன்கூட்டியே நிறைவுச் செய்ய முடிந்தால், அது நல்லது'', என்றார் அவர்.
இருவழிகளிலும், 900 மீட்டர் நீளமுள்ள ஆறு வழித்தடங்களைக் கொண்ட இரட்டைப் பாதை கட்டுமானப் பணிகள் இதில் அடங்கும் என்று, இன்று அத்திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி செய்தியாளர்களிடம் பேசினார்.
அதோடு, புக்கிட் காயு ஹித்தாம் பொது நடவடிக்கைப் படை, PGA-வின் வியூக தலைமையகம் செல்வதற்கான 300 மீட்டர் சேவை சாலையும் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)