பொது

மகனை கத்தியால் தாக்கியதால் தடுப்புக் காவலில் ஆடவர்

03/05/2025 04:55 PM

கோத்தா பாரு, 03 மே (பெர்னாமா) --    கிளாந்தான் பாசிர் மாஸ், பொஹொன் தஞ்சோங்கில் உள்ள கம்போங் பங்கோல் செ டொல் பகுதியில், நேற்று, கடுமையான காயங்கள் ஏற்படும் அளவுக்கு காய்கறி நறுக்கும் கத்தியால் தமது மகனை இரு முறை தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆசிரியர், இன்று தொடங்கி ஏழு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொலை முயற்சியாக வகைக்கப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவத்தை குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 307-இன் கீழ் விசாரிக்க, மாஜிஸ்திரேட் அஹ்மாட் ஷாபிக் அயிசாட் நஸ்ரி, இன்று கோத்தா பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 47 வயதுடைய அந்த ஆசிரியரின் தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

இன்று காலை மணி 8.44-க்கு அச்சந்தேக நபரான அவ்வாடவர் கோத்தா பாரு நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

இச்சம்பவத்தில், 11 வயதுடைய அச்சிறுவனுக்கு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து, காலை மணி 9.08 அளவில் பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததாக பாசிர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கமா அசுரால் முஹமட் தெரிவித்தார்.

குடும்ப பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளதாக நம்பப்படும் சந்தேக நபர் மனநலப் பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டு, 2008-ஆம் ஆண்டிலிருந்து அதற்கான சிகிச்சையைப் பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)