கோலாலம்பூர், 03 மே (பெர்னாமா) -- OUM எனப்படும் மலேசிய பொது பல்கலைக்கழகத்தின் 29-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை கோலாலம்பூரில் சிறப்பாக தொடக்கம் கண்டது.
வரும் ஆகஸ்ட் மாதம் தனது 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடும் OUM பல்கலைக்கழகம், இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் பல்வேறு துறைகளில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றவர்களில், இவ்வாண்டு இந்திய மாணவர்களின் அடைவுநிலையும் பெருமை அளிக்கும் வகையில் உள்ளது.
இளங்கலை, முதுகலை என பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மத்தியில் ஜோகூர் பாரு, கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் கோமதி சங்கரன் முனைவர் பட்டம் பெற்றார்.
பல தடைகளை எதிர்கொண்டாலும், முயற்சியைக் கைவிடாமல், தாயின் ஆசையை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு கல்வியியல் துறையில் அவர் தமது முனைவர் பட்டப்படிப்பை நிறைவு செய்ததாக கூறினார்.
''நான் இதே இடத்தில் தான் என்னுடைய இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருந்தேன். அன்று என்னுடைய அம்மா முதுகலை பட்டம் பெறுபவர்களைப் பார்த்து, நீயும் இதை படி என்று சொன்னார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதே இடத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றேன். பின்னர், என்னுடைய அம்மா முனைவர் பட்டத்தையும் பயில சொன்னார். இன்று அதையும் முடித்து பட்டம் பெற்றுள்ளேன். என்னுடைய இந்த வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்னுடைய அம்மா தான்'', என்று கோமதி சங்கரன் கூறினார்.
அதுமட்டுமின்றி, உள்ளூர் மற்றும் கனடா, ஈரான், இந்தியா, தென் கொரியா, இலங்கை மற்றும் ஹாங்காங் என அனைத்துலக ரீதியில் பல புத்தாக்க போட்டிகளில் 220 பதக்கங்களை வென்றதால் கோமதிக்கு கடந்தாண்டு OUM-மில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிட்ட காலமும் வயதும் இருந்தால் மட்டுமே கல்வியைக் கற்க முடியும் என்ற சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சாதனைக்கு அவை தடையல்ல என்பதை இன்னும் பலர் இந்த பட்டமளிப்பு விழாவில் நிரூபித்தனர்.
''உன்னால் முடியாது. பிள்ளைகள் இருக்கின்றது. செய்ய வேண்டாம் என்று நிறைய பேர் சென்னார்கள். ஆனால், நான் செய்துவிட்டேன். அனைவராலும் முடியாது என்று சொல்லக்கூடாது. பெண்களால் முடியும், யாராக இருந்தாலும் முடியும், உங்களாலும் மற்றவர்கள் போல முடியும். ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள்'', என்று நிர்வாக துறையில் இளங்கலை பட்டம் பெற்ற திலகவதி அப்பாதுரை கூறினார்.
''நான் 2022-ஆம் ஆண்டில் தொடங்கினேன். இதனை நிறைவு செய்ய மூன்று வருடங்கள் எடுத்தது. இதற்கிடையில், நான் வேலை மற்றும் என்னுடைய ஓய்வற்ற அட்டவணையின் காரணமாக சில சவால்களை எதிர்நோக்கினேன்'', என்றார் ஆலோசனை துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற தோமஸ் ஜோர்ஜ்.
இதனிடையே, முழு நேரமாக வேலை செய்து, பகுதிநேரமாக கல்வி கற்க நினைப்பவர்களுக்கு OUM பல்கலைக்கழகம் முதன்மை தேர்வாக அமைகின்றது.
தொழில் மற்றும் கல்வி ஆகிய இரண்டிற்கான நேரத்தையும் சமநிலையாக நிர்வகித்து, அதன் வெற்றியைத் தன்வசமாக்கிக் கொள்வதில் பல்வேறு சவால்களைக் கடந்து வந்ததாக, பட்டம் பெற்ற மாணவர்கள் சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.
''கல்வி ரீதியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. முன்பு படித்ததை விட தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சியடைய புதிதான விடயங்களை தான் நாம் கற்றுக் கொள்கிறோம். எனவே, நாம் இன்னும் நம்மை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதுவே எனக்கு ஒரு சவாலாக இருந்தது'', என்று கல்வி துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற அபிராமி முனியாண்டி கூறினார்.
''உண்மையில் மிகவும் சவாலாக இருந்தது. போலீஸ் வேலை சாதாரண வேலைகளைப் போல இருக்காது. அதனால், மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய நண்பர்கள், குடும்பம் அனைவரும் ஆதரவு வழங்கினர். எப்படியாவது இதை முடிக்க வேண்டும் என்ற கெள்கையோடு, வெற்றிகரமாக முடித்துவிட்டேன், அடுத்த வருடம் எனக்கு இண்ஸ்பெக்டர் பதவி கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்'', என்றார் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற அர்விந்திரன் சேகர்.
கோலாலம்பூர், உலக வாணிப மையம் WTC-யில், இன்று தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இப்பட்டமளிப்பு விழாவில் இம்முறை 7,915 பேர் பட்டம் பெறவுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)