டாக்கா, 11 மே (பெர்னாமா) - கடந்தாண்டு மக்கள் போராட்டத்திற்குப் பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான முன்னாள் ஆளும் அவாமி லீக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் வங்காளதேச இடைக்கால அரசாங்கம் சனிக்கிழமை தடை செய்தது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹமட் யுனுஸ் தலைமையிலான இடைக்கால அமைச்சரவை, நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், இணையத்திலும் பிற இடங்களிலும் அக்கட்சியின் நடவடிக்கைகளைத் தடை செய்ய முடிவு செய்ததாக, நாட்டின் சட்ட விவகார ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் நேற்றிரவு தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பிற போராட்டக்காரர்கள் இறந்தது தொடர்பாக, கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றம் முடிக்கும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
இந்த முடிவு, தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதையும், வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள ஜூலை இயக்கத்தின் ஆர்வலர்கள், வாதிகள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக Asif Nazrul கூறினார்.
ஹசினா எதிர்ப்புப் போராட்டத்தின் போது கொலைக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய எந்தவொரு அரசியல் கட்சியையும் வங்காளதேசத்தின் அனைத்துலக குற்றவியல் நடுவர் மன்றம் விசாரிப்பதற்கான வாய்ப்பை சனிக்கிழமை கூட்டம் விரிவுபப்டுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தடை தொடர்பான அரசு அறிவிப்பு விரைவில் விரிவான விவரங்களுடன் வெளியிடப்படவிருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)