உலகம்

நேரடி பேச்சு வார்த்தைகளில் பங்கேற்க உக்ரேனுக்கு ரஷ்ய அதிபர் அழைப்பு

12/05/2025 05:57 PM

மாஸ்கோ, 12 மே (பெர்னாமா) --   கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, நேரடி பேச்சு வார்த்தைகளில் பங்கேற்குமாறு உக்ரேனுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

இச்சந்திப்பு மே 15-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நீண்ட கால அமைதியை நிலைநாட்டும் பொருட்டு அர்த்தமுள்ள பேச்சுவாரத்தைகளை ரஷ்யா எதிர்பார்ப்பதாக புதின் தெரிவித்திருக்கிறார்.

மேலும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், துருக்கி இஸ்தான்புலில் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக துருக்கி அதிபர் ரிகெப் தயிப் எர்டோகனிடம் தாம் கலந்து ஆலோசிக்கவிருப்பதாக புதின் தெரிவித்தார்.

இதனிடையே, புதின் விடுத்திருக்கும் அழைப்பை தாம் ஏற்பதாக உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

அண்மையில், ஐரோப்பிய தலைவர்களுடன் ஜெலென்ஸ்கி சந்திப்பு நடத்தியிருந்தார்.

அச்சந்திப்புக்கு பிறகு, 30 நாள்கள் போர் நிறுத்தத்துக்கு புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால் ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் வங்கி துறைகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஐரோப்பிய தலைவர்கள் எச்சரித்தனர்.

மற்றொரு நிலவரத்தில், தற்போது போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் தாக்குதலை உடனடியாக நிறுத்தி அமைதிக்கு வழிவிட வேண்டும் என்று புதிய போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் லியோ அறிவுறுத்தியிருக்கிறார்.

உக்ரேன் - ரஷ்யா போர், காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்தத்தை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

புதிய போப்பாண்டவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களிடையே போப் லியோ முதன்முறையாக உரையாற்றினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)