உலகம்

தென் சூடானில் வெள்ளம்; 19 பேர் பலி

04/10/2025 05:39 PM

தென் சூடான், 04 அக்டோபர் (பெர்னாமா) -- தென் சூடானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 19 பேர் பலியாகினர்.

மேலும், ஆறு மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆறு லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளத்தினால், 16 மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து உயர்ந்த இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின், மனிதநேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மலேரியா, சுவாச நோய்த் தொற்றுகள் மற்றும் வயிற்றுப்போக்கு அதிகரித்து வருவதோடு, சுகாதார அபாயங்களும் அதிகரித்து வருவதாக கூறியது.

11 மாவட்டங்களில் குறைந்தது 121 சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 144 பாம்புக்கடி சம்பவங்களும் மூவாயிரத்து 391 ஊட்டச்சத்து குறைபாடு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தெற்கு சூடானில் 14 லட்சம் பேர் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிகமாக மழை பெய்யும் என்று அனைத்துலக தொண்டு நிறுவனமான 'Save the Children' அறிக்கை வெளியிட்டிருந்தது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)