கோலாலம்பூர், 09 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசியாவில் தற்போதுள்ள 528 தமிழ்ப்பள்ளிகளில் 165, அல்லது 31 விழுக்காட்டுப் பள்ளிகள் அரசாங்கப் பள்ளிகளாகவும், எஞ்சிய 363, அதாவது 69 விழுக்காட்டுப் பள்ளிகள் அரசாங்க உதவி பெற்றப் பள்ளிகளாகவும் உள்ளன.
அதில், பெரும்பாலான பள்ளிகள் அமைந்திருக்கும் நிலங்கள், அரசாங்கப் பதிவேட்டில் பதிவுச் செய்யப்படாததால், பள்ளி மேம்பாட்டிற்கு தேவைப்படும் நிதியை அரசாங்கத்திடமிருந்து கோருவதிலும் அப்பள்ளிகளைத் தற்காத்துக் கொள்வதிலும் பல்வேறான சிக்கல்களை எதிர்நோக்கும் நிலை இன்றளவும் ஏற்படுகின்றது.
எனவே, அச்சிக்கலைக் களைவதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினர் அரசாங்கப் பதிவேட்டில் பதிவுச் செய்யும் செயல்முறையை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் விரைந்து ஈடுபட வேண்டும் என்று மலேசியத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்புச் செயலாளர் சுப்ரமணியன் இராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
''பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகம் உள்ளன. மூன்று கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெறும் முயற்சிகளில் வெற்றிப் பெற்றோம். ஆனால், நிலம் அரசாங்கப் பதிவேட்டில் பதியப்படவில்லை. பல பள்ளிகளுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிலங்களை அரசாங்கப் பதிவேட்டில் பதிய வேண்டும். இல்லையெனில், அது வாரியத்தின் சொந்த நிலமாக இருக்க வேண்டும்,'' என்றார் அவர்.
தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலங்களை அரசாங்கப் பதிவேட்டில் பதிவுச் செய்வதற்கான வழிமுறைகளையும் சுப்ரமணியன் இவ்வாறு விவரித்தார்.
''உதாரணத்திற்கு, தோட்ட மேம்பாட்டு நிறுவனங்கள் நிலத்தை கொடுத்திருந்தால் அவர்களிடமிருந்து ஓர் உறுதி கடிதத்தைப் பெற வேண்டும். அதனைக் கொண்டு மாநில அரசாங்கத்திடம் மனு செய்ய வேண்டும்,'' என்று அவர் விளக்கமளித்தார்.
இதனிடையே, ஒவ்வோர் ஆண்டுடின் வரவுசெலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சிற்காக ஒதுக்கீடுச் செய்யப்படும் சுமார் 6,000 கோடி ரிங்கிட் நிதியில், அரசாங்க உதவிப் பெற்ற பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படாது என்பதையும் சுப்ரமணியன் தெளிவுபடுத்தினார்.
''மாறாக, பிரதமர் துறையின் கீழ் சிறப்பு நிதி வழங்கப்பட வேண்டும். அதனைதான், இந்த அரசாங்க உதவிப் பெற்ற பள்ளிகள் விண்ணப்பிக்க வேண்டும்,'' என்றார் அவர்.
அதேவேளையில், 2026-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றத்திற்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என தங்கள் தரப்பு பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
''தமிழ்ப்பள்ளி இடமாற்றத்திற்கான நிதி தேவை உள்ளது. அது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஐந்து தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஐந்து கோடி ரிங்கிட்டை பரிந்துரைத்துள்ளோம். அதோடு கட்டி முடிக்காமல் இருக்கும் பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீட்டை கோரியுள்ளோம்,'' என்றார் அவர்.
மேலும், தமிழ்ப்பள்ளி நிர்வகிப்பிற்கான சிறப்பு செயற்குழு ஒன்றும் பிரதமர் துறையின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்ற கூடுதல் கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.
நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 வரவுசெலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த விவகாரங்கள் குறித்து, இன்று பெர்னாமா செய்திகளுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் சுப்ரமணியன் பகிர்ந்துகொண்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]