மாரான், அக்டோபர் 11 (பெர்னாமா) -- பகாங், மாரான் அருகே, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் 162.9-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில், திரெங்கானுவில் உள்ள அசிஸ் சடார் எனும் உணவக உரிமையாளரும் அவரின் மனைவியும் உயிரிழந்த வேளையில் நால்வர் காயங்களுக்கு ஆளாகினர்.
நேற்றிரவு மணி 7.30 அளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் நான்கு சக்கர வாகனத்தைச் செலுத்திய 68 வயதான அசிஸ் அவாங் மற்றும் அதில் பயணித்த அவரின் மனைவி 64 வயதான ஹஸ்னா மாட் நோங் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களின் பணியாளர்களுடன் கேமரன் மலையிலிருந்து திரெங்கானு, கெமாமான் நோக்கி பயணத்தில் இருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக, மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடென்டன் வொங் கிம் வாய் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
சம்பவத்தின் போது மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில், அக்கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் தடம் புரண்டதாக நம்பப்படுகிறது.
அவர்களின் பணியாளர்களான 27, 45 மற்றும் 65 வயதான பெண்கள் மூவர் காயங்களுக்கு ஆளான நிலையில், அவர்களில் ஒருவரின் எட்டு வயது மகளும் காயங்களுக்கு ஆளாகியிருக்கிறாள்.
அவர்கள் அனைவரும் தற்போது Temerloh மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 41(1)-இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)